ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை

ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை
Updated on
1 min read

தமிழகத்தில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி எம்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட தகவலையறிந்து, பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சிக்கிய கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து வந்திருந்த 3 பேரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்பட 25 பேரை சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுச்சேரி பாஜக தலைவரும், எம்.பி.யுமான செல்வகணபதிக்கு சென்னை சிபிசிஐடி போலீஸார் கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது அவர் 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் அவகாசம் முடிவடைந்து அவர், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு பின்னர் மீண்டும் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிசிஐடி போலீஸார் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in