சங்கராபரணி - தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை

சங்கராபரணி - தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை
Updated on
1 min read

விழுப்புரம்: சங்கராபரணி - தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளிலும் அகழாய்வு மேற்கோள்ள, விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் “சங்ககால தொல்லியல் தடயங்கள் கண்டெடுக்கப்பட்ட பம்பை ஆற்றுப் பகுதியில் அகழாய்வு நடத்தப்படும்” எனும் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்கு உரியது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் அகழாய்ப் பணிகள் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள செ.கொத்தமங்கலம், விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் (பூவரசங்குப்பம்), தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரிக்கல் ஆகிய இடங்களிலும் எழுத்து மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், போர் வீரர்கள் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பொருட்கள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இடங்களும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (சங்ககால) மக்களின் வாழ்வியல், வரலாற்றுத் தடயங்கள் நிறைந்தப் பகுதிகளாகும். இந்த இடங்களிலும் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்யப்பட்டால் பழந்தமிழ் வரலாற்றுக்கு வலுசேர்க்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கக் கூடும். இதற்கு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in