பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்: உதயநிதி தலையீட்டால் நிலைமை சீரானதாக தகவல்

பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான கபடி வீராங்கனைகள் சென்னை திரும்பினர்: உதயநிதி தலையீட்டால் நிலைமை சீரானதாக தகவல்
Updated on
1 min read

பஞ்சாப்பில் நடந்த கபடி போட்டியில் நடுவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எதிரணியினரால் தாக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் பாதுகாப்பு கிடைத்ததாகவும் சென்னை திரும்பிய கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையே பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து அழகப்பா, பெரியார் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகங்களின் சார்பில் 3 அணிகள் பங்கேற்றன. இதில் அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழக அணிக்கும் இடையே கால் இறுதிப்போட்டி நடந்தது.

அப்போது எதிரணி வீராங்கனைகள் பவுல் செய்ததாக, தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டு நடுவர்கள், தமிழக வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பயிற்சியாளர் பாண்டியராஜன் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பஞ்சாப்பில் இருந்து தமிழக கபடி வீராங்கனைகள் நேற்று சென்னை திரும்பினர். எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்துக்கு அழைத்துச்சென்றனர்.

முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவி ஜெயஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிரணி வீராங்கனை எங்களை தாக்கியதால் தற்காப்புக்காக தடுக்க முயற்சித்தோம். நாங்கள் தடுக்க முயற்சித்ததை தாக்கியதாக மாற்றி சொல்லிவிட்டார்கள். பின்னர் போட்டியின் நடுவர்களும் எங்களை தாக்கத் தொடங்கினர்.

எங்களது பயிற்சியாளரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரும் தாக்கப்பட்டு இருந்தார். எங்களை மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்க சொன்னார்கள். அதற்குள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பேசிய பிறகு, எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. அதன்பின்தான் எங்களுக்கும் நிம்மதி வந்தது. இவ்வாறு கூறினார்.

கபடி அணியின் பயிற்சியாளர் கலையரசி கூறும்போது, “போட்டியின்போது ஒருதலைபட்சமாக முடிவுகளை அறிவித்தனர். எங்களுக்கு பாதகமான முடிவுகள் வழங்கப்பட்டன. கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பின்னர் நிலைமை மாறியது. எல்லா பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு எங்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவானது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in