

வேங்கைவயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் அல்ல. இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றமும் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோ ரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேங்கைவயல் வழக்கு குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் வாதிடும்போது, "வேங்கைவயல் விவகாரத்துக்கு ஜாதி மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ காரணம் கிடையாது. இருவர் இடையேயான தனிப்பட்ட பிரச்சனையே காரணம். கடந்த 2 வருடங்களாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 3 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 389 சாட்சிகளிடம் போலீஸார் விசாரனை நடத்தினர். 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன. மேலும் 87 டவர் லொகேஷன் ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த அழிக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் ஆகியவை நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு, அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள், அங்கிருந்தபடி தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அனைத்தும் அறிவியல்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பேசிய நபர்களின் ஆடியோக்கள் அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை தொட்டியில் எந்தக் கழிவுகளும் கலக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இரவு 7.35 மணிக்கு மேல்தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது வழக்கின் விசாரணை முடித்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்" என்றார். இதையடுத்து நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.