

திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடு திருப்பரங்குன்றம். இந்தக் கோயில் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், தீபத்தூண், ஸ்தல விருட்சம் உள்ளது. தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயில் மற்றும் 11 தீர்த்தக்குளங்களும் உள்ளன. சைவத் தலமான திருப்பரங்குன்றம் கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதல் கூடாது. மாமிசங்களை சமைக்கவும், பரிமாறவும் கூடாது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பில் கடந்த ஜனவரி 18-ம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு சமபந்தி நடத்தப்படும் என நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தர்களின் மனதை புண்படுத்தியது. மேலும், திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் தர்காவில் இதற்கு முன்பாக உயிரினங்களை பலியிடவோ, கந்தூரி அல்லது சமபந்தி விழாக்கள் நடத்தவோ எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில், தற்போது தர்கா தரப்பில் இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமாகும். இது மதரீதியாக பிரச்சனைகளை உருவாக்கும் முயற்சியாகும்.
எனவே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவினர் உயிரினங்களை பலியிடுவதற்கும், மாமிசங்களை சமைக்கவும், உணவு பரிமாறவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியக் கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் "இதே விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் "இந்த மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அறநிலையத் துறை இணை ஆணையர், திருமங்கலம் கோட்டாட்சியர், சிக்கந்தர் பாதுஷா தர்கா அறங்காவலர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, இதே கோரிக்கை தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடுமாறு அறிவுறுத்தில், விசாரணையை தள்ளிவைத்தனர்.