

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வார்டு வாரியாக பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்காக, 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 46 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பூத்சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை உள்ளடக்கியதாகும். இதில், வார்டு வாரியாக வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும் அலுவலர்கள், அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதித்து, அதன் அடிப்படையில் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இப்பணி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1,194 அலுவலர்கள் தேர்தல் பணி ஆற்றவுள்ளனர். இவர்களுக்கு கடந்த 19-ம் தேதி முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ரங்கம்பாளை யத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று இரண்டாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரி செய்வது, வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் முடிவில், அவர்கள் வாக்குச் சாவடிகளில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்படும். அதே நாளில், தேர்தல் பணியாற்றுவோர் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காந்த் மற்றும் அலுவலர்கள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.