

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். அவருக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
முன்னதாக திண்டிவனம் நகரில் மேம்பாலம் வழியாக தனியார் திருமண மண்டபம் வரை நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்றார்.
இன்று (ஜன.28) காலை 10 மணிக்கு விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வரும் வழியில் பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மனுக்களை பெறுகிறார். பகல் 12 மணிக்கு விழா நிறைவு பெற்றவுடன் சென்னைக்கு திரும்புகிறார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.