

சென்னை: இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் 15 கோடியாக அதிகரித்துள்ளதாக கேரள மாநில திட்ட வாரியத்தின் துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சொற்பொழிவு’ கடந்த அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் இருந்து பேச்சாளர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
இந்த சொற்பொழிவுத் தொடர் காலநிலை மாற்றம், குறைந்து வரும் இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தேவை போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ள சமூகப் பார்வையுடன் எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவியல் சிந்தனைகளை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய உதவும் ஒரு தளமாக இருந்து வருகிறது.
அதன்தொடர்ச்சியாக ஜனவரி மாதத்துக்கான சொற்பொழிவில், கேரள மாநில திட்ட வாரியத்தின் துணைத் தலைவர், பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன் பங்கேற்று நேற்று பேசினார். அப்போது ‘சமகால இந்தியாவில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற கூலித் தொழிலாளர்கள்’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் கிராமப்புற தொழிலாளர் வர்க்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். இந்தியாவில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அடிப்படையில் 2011-12-ம் ஆண்டு 10.1 கோடியாக இருந்த கிராமப்புற பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2023-24-ம் ஆண்டில் 15.3 கோடியாகவும், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23.3 கோடியில் இருந்து 25.8 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கிராமப்புற பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மொத்தம் 41.1 கோடி பேர் கிராமப்புற தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.