

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 நாள் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 19-ம் தேதி அனுமதி வழங்கியது.
கடந்த 21-ம் தேதி விசாரணையின்போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதேபோல் நேற்று முன்தினமும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருமுறை சேர்க்கப்பட்டார். பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில், 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நேற்று அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அவர் மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இந்த வழக்கின் எப்ஐஆர் கசிந்த விவகாரம் தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஆய்வாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.