தமிழக வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம்: தொண்டர்களுக்கு எழுதிய மடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழக வளர்ச்சிக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம்: தொண்டர்களுக்கு எழுதிய மடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்று தொண்டர்களுக்கு எழுதிய மடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்றுஎழுதிய மடல்: தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அரசின் மீது எந்தளவு நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை மதுரையில் நடந்த பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி எனும் பழம்பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல்லுயிர்ச் சூழல் கொண்ட பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டபோது, தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திமுக. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மத்திய அரசு சட்ட விதிகளைத் திருத்தி ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டிய போது, அதற்கும் கண்டனம் தெரிவித்துச் செயல்பட்டது.

மதுரை மக்களின் மனநிலையை உடனுக்குடன் அமைச்சர் மூர்த்தி எனக்குத் தெரிவித்து வந்தார். தமிழக அரசு மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. திமுக மற்றும் தோழமை கட்சிகளின் எம்.பி.க்கள், உறுதியான குரலில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். சட்டப்பேரவையிலும் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

மதுரை மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடத்திய மாபெரும் மக்கள் பேரணியை சிறு அசம்பாவிதமும் இன்றி அறவழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருந்தது. அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானமும், திமுக அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் மத்திய பாஜக அரசைப் பணியச் செய்தது.

திமுக உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று ஜன.26-ம் தேதி மதுரைக்கு புறப்பட்டேன். அரிட்டாபட்டியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு மாபெரும் வரவேற்பு அளித்தனர். பாராட்டுகளைக் குவித்தனர். அவர்களிடம் உரையாற்றிய நான் இது என்னுடைய அரசின் வெற்றியல்ல. நம்முடைய அரசின் வெற்றி என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

அரிட்டாபட்டி போலவே அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக வல்லாளப்பட்டியில் திரண்டு இருந்தனர். அவர்களையும் சந்தித்து பாராட்டுதல்களைப் பெற்றதுடன், உங்களுக்கு என்றும் இந்த அரசு துணையாக இருக்கும் என்பதை தெரிவித்தேன். வாழ்த்து முழக்கங்களும் ஆரவாரமும் இந்த அரசு மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன். 7-வது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்பதை உங்கள் மீதான நம்பிக்கையுடன் உரக்கச் சொல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in