வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவில் வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தின்போது காவல்துறையினரால் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.28-ம் தேதி (இன்று) திறந்து வைக்கிறார். பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க இதுவரை ஒரு துரும்பைக் கூட திமுக அரசு கிள்ளிப் போடவில்லை. இடஒதுக்கீட்டுக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கும்போதெல்லாம் அதை மடைமாற்றும் வகையிலான நாடகம்தான் இந்த மணிமண்டப திறப்பு விழா.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், சமூகநீதி கோட்பாட்டின்படியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதி. அதுதான் இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு செய்யப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும். அதைவிடுத்து, மணி மண்டபம் திறப்பது நாடகமாகத்தான் இருக்கும். இதை அவர்களின் ஆன்மா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றும் அறிவிப்பை விழுப்புரத்தில் நடைபெறும் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை உடனே பெற்று விரைவில் நடைபெறவிருக்கும் பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் இடஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in