

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த தடையை மீறி செல்ல முயன்றதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவரது பிறந்தநாளை யொட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் மற்றும் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள திட்டமிட்டார். இதற்காக தனது மனைவியுடன் மதுரை வந்த அவர், திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பகுதியில் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கே கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினர். மதியத்துக்கு மேல் மனைவியுடன் காரில் புறப்பட்டு திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்றார்.
இந்நிலையில் மதுரை - திருமங்கலம் ரோட்டில் தனக்கன்குளம் அருகே காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் ஆய்வாளர் மதுரைவீரன் உள்ளிட்ட போலீஸார் இப்ராஹிம் காரை தடுத்து நிறுத்தினர். இது பற்றி தகவல் அறிந்த பாஜகவினர் சிலரும் அங்கு வந்தனர். திருப்பரங்குன்றம் மலைமேலுள்ள தர்காவுக்கு செல்ல தடை இருப்பதாலும் சட்டம், ஒழுங்கு காரணமாக அங்கு போகக்கூடாது என, அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், தடையை மீறி போவேன் என, கூறியதால் இப்ராஹிம், அவரது மனைவி மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சிரில் ராயப்பன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக இப்ராஹிம் கோஷங்களை எழுப்பினார். கைது செய்யப்பட்ட அவர்களை அப்பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.