அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு 

அமைச்சர் ராஜகண்ணப்பன் | கோப்புப்படம்
அமைச்சர் ராஜகண்ணப்பன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ராமநாதபுரம், சிவகங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். 2021 மார்ச் 27 அன்று கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கொடி கம்பங்களையும், தோரணங்களையும் கட்டி பிரசாரம் செய்ததாக பேரையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதேபோல சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தமிழரசியை ஆதரித்து ராஜகண்ணப்பன் கடந்த 2021 ஏப்.2 அன்று மானாமதுரை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்து, 15 வாகனங்களில் சென்று பிரசாரம் மேற்கொண்டதாக சாலைக்கிராமம் போலீஸார் ராஜகண்ணப்பன் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில், ‘இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். அத்துடன் இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்.17-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in