

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களில் ஒருவரும், இந்தியாவில் இதய பைபாஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையை அறிமுகப்படுத்தியவருமான மருத்துவர் கே.எம்.செரியன் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு திடீரென மயக்கமடைந்த அவர், உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் காயம்குளத்தில் 1942-ல் பிறந்த கே.எம்.செரியன், மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிறகு வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக 1970-ல் பணியாற்றினார். பின்னர் இதய அறுவை சிகிச்சையில் எப்ஆர்ஏசிஎஸ் படிக்க பிரிட்டன் சென்ற அவர், பிறகு நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு உலகத்தரத்தில் இதய அறுவை சிகிச்சைகளை செய்வதில் கைதேர்ந்தவராக உருவெடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் தனது 26-வது வயதிலேயே திறந்த நிலை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். சர்வதேச அளவில் பணி வாய்ப்பும், பாராட்டுகளையும் பெற்றாலும், அதனை விடுத்து சென்னை திரும்பிய அவர், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கடந்த 1975-ல் இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்தார்.
மருத்துவர் கே.எம்.செரியனால் பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி சுமார் 25 ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்தார். அதேபோல், உறுப்பு மாற்று சிகிச்சைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட பிறகு, இந்தியாவிலேயே முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்தார் செரியன். நாட்டின் முதலாவது இதயம் - நுரையீரல் மாற்று சிகிச்சை, குழந்தைக்கு முதன் முறையாக இதய மாற்று சிகிச்சை என பல சாதனைகளை செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் அவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இவைதவிர சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் மருத்துவத்துறையின் பெரும்பாலான உயரிய விருதுகள் மருத்துவர் கே.எம். செரியனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் நிறுவனர், பாண்டிச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவ மையத்தின் நிறுவனர், சென்னை, ஃப்ரன்டயர் லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் என உயர் சிறப்பு மிக்க பல மருத்துவமனைகளை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உள்ளது. மருத்துவர் கே.எம்.செரியனின் மனைவி செலின் செரியன், கரோனா பாதிப்புக்குள்ளாகி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மகன் மருத்துவர் சஞ்சய் செரியன், மகள் சந்தியா செரியன் ஆகியோர் உள்ளனர். மருத்துவர் கே.எம்.செரியனின் இறுதிச் சடங்குகள் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியனின் மறைவு வேதனை அளிக்கிறது. இதயவியல் மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அது பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும். புதிய தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கும்.
முதல்வர் ஸ்டாலின்: இதய அறுவை சிகிச்சையில் உலக அளவில் அறியப்பட்ட மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இதய சிகிச்சையில் அவரது முன்னோடியான பணிகள் எண்ணற்றோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. மருத்துவத்துறையில் பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவரது பங்களிப்புகள் மருத்துவத்துறையில் சிறப்பான பணிகளுக்கு தொடர்ந்து தூண்டுகோலாக இருக்கும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்தியாவின் முதல் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த பெருமைக்குரிய மருத்துவர் செரியனின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாக கருத்தப்படும் அவரது மறைவு இந்திய மருத்துவத்துறைக்கு பேரிழப்பு.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மருத்துவத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி, தமது சேவையின் மூலம் பெரும் புகழை ஈட்டிய மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. செரியனின் மறைவு மருத்துவத் துறைக்கு ஈடுசெய்ய முடியாதது.
பாமக தலைவர் அன்புமணி: மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். இந்தியாவின் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான அவர், தொலைநோக்கு பார்வையாளராகவும், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.
இவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.