‘பொன்னுக்கு வீங்கி’ தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும்: தமிழக பொது சுகாதாரத் துறை

‘பொன்னுக்கு வீங்கி’ தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும்: தமிழக பொது சுகாதாரத் துறை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால், தேசிய தடுப்பூசி அட்டவணையில் இதற்கான தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

‘பொன்னுக்கு வீங்கி’ எனப்படும் ‘மம்ப்ஸ்’ நோய், பாராமைக்சோ எனும் வைரஸால் பரவுகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால், உமிழ்நீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு, காது - தாடை இடையே கன்னங்களில் வீக்கம் ஏற்படுகிறது. அத்துடன், சோர்வு, கடுமையான வலி, காய்ச்சலுடன் தலைவலி, பசியின்மை போன்றவையும் ஏற்படுகின்றன.

இது எளிதில் தொற்றக்கூடியது. பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்டவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒரு வாரம் முதல் 16 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கும். குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே, பாதிப்பு சரியாகிவிடும்.

தமிழகத்தில் கடந்த 2021-22 காலகட்டத்தில் 61 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை 2022-23-ல் 129 ஆகவும், 2023-24-ல் 1,091 ஆகவும் அதிகரித்துள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் எம்ஆர் எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி மட்டும் வழங்கப்படுகிறது. அதில், மம்ப்ஸ் சேர்க்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், தேசிய அட்டவணையில் அந்த நோய்க்கான தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை ஆய்வு இதழில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in