புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது: நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது: நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
Updated on
1 min read

சென்னை: பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவ.7-ம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து பேரணியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இதற்கு, நவ.6-ம் தேதி அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவுக்கு பதிலளித்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், "பேரணி குறித்து கேட்கப்பட்ட விவரங்களுக்கு எந்த பதிலும் அளிக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அனுமதியின்றி பேரணி நடத்தப்பட்டதால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பேரணி நடைபெறாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது. இதற்கு காவல்துறை எந்த விதத்திலும் பொறுப்பல்ல’ என கூறப்பட்டிருந்தது. பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in