

கடலூர்: குடியரசு தின விழாவை யொட்டி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதுபோல காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள லால்பேட்டை பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.26) காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, பொது தீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட் டது.
பின்னர், மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதுபோல காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி .ஜாஃபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது நூருல்லாஹ் மன்பயீ ஹள்ரத் திருமறை வசனங்கள் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.
மன்பஉல் அன்வார் மாணவர்கள் ஹாபிழ்கள் முஹம்மது யஹ்யா, முஹம்மது அனஸ், சுகைல் அஹ்மத் ஆகியோர் தேசிய கீதம் பாடினர். மவ்லவி முஹம்மது அய்யூப் மன்பயீ குடியரசு தின உரை நிகழ்த்தினார். ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் முஹம்மது சாதிக் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மஸ்ஜித் நிர்வாகிகள், மாணவர்கள், ஜாமாத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.