

சென்னை: இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளில், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மாண்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்.
முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காலை 8 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆளுநருக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மூவர்ணக்கொடியை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றினார்.