

சென்னை: வழக்கறிஞர்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவசியம் என சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை வழங்கினார். சட்டப்படிப்பு முடித்த 380 மாணவர்கள், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது:
மாணவர்களின் முதல் தேர்வு: மற்ற பாடங்களில் இடம் கிடைக்காவிட்டால் சட்டப்படிப்பை தேர்வு செய்து வந்த நிலையில், மாணவர்களின் முதல் தேர்வாக சட்டப்படிப்பு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சரியான வழக்கறிஞராக இருந்தால்தான்யாரையும் கேள்வி கேட்க முடியும். இனி நடை, உடை, பாவனையில் மாற்றம் வர வேண்டும்.
வழக்கறிஞர் தொழிலில் நிதானம் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றும் மிகவும் அவசியம். பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்து, பெரும் பொருட்செலவில் வழக்கறிஞர்களாக்கியுள்ளனர். ஆனால் பிள்ளைகளில் சிலர், பணத்தை பார்த்தவுடன் பெற்றோரை மறந்துவிடுகின்றனர். அப்படி இருக்கக் கூடாது. பெண்கள் திருமணத்துக்கு பின்னரும் பயிற்சியைத் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்தி கேயன், பார் கவுன்சில் முன்னாள்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.