Published : 25 Jan 2025 04:51 PM
Last Updated : 25 Jan 2025 04:51 PM
மதுரை: 160 ஆண்டுகளை கடந்த பல்வேறு வரலாற்றை சுமந்து நிற்கும் மதுரை மத்திய சிறைச்சாலை, அரசு மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற உள்ளது. தற்போது கைதிகளை சீர்திருத்திய இடம், விரைவில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கப்போகும் இடமாக மாறுகிறது.
தமிழகத்தில் சென்னை புழல், வேலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. சென்னை சிறை 77 ஏக்கர், வேலூர் சிறை 153 ஏக்கர், திருச்சி சிறை 289 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதில் மதுரை மத்திய சிறைச்சாலை 28.8 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. மற்ற சிறைச்சாலைகளுடன் ஒப்பிடும் போது மதுரை சிறைச்சாலையில் இடநெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இச்சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அக்காலத்தில் ஏற்பட்ட குற்றச் செயல்களுக்கு தகுந்தவாறு, இந்த சிறைச்சாலை வடிவமைக்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் அதிகமான கைதிகளை அடைப்பதற்கு போதுமான இடவசதியில்லை.
மேலும், மத்திய சிறைச்சாலை தற்போது அமைந்துள்ள இடம், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. கைதிகளை பார்க்க அவர்கள் உறவினர்கள் வந்து செல்வது, அவர்கள் நிறுத்தும் வாகனங்களால் முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், மத்திய சிறைச்சாலையை, புறநகர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலிக்கப்பட்டு வந்தது. மதுரையின் புறநகர் பகுதிகளான இடையப்பட்டி, சிறுமலை அடிவாரத்தின் பகுதிக்கு இடமாற்றம் செய்யலாமா என அரசு ஆய்வு செய்தது. தற்போது மேலூர் அருகே செம்பூரில் ரூ.350 கோடியில் 89 ஏக்கரில் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. பழைய சிறைச் சாலை வளாகம், மகப்பேறு சிறப்பு மருத்துவமனையாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது உள்ள 28.8 ஏக்கர் சிறை வளாகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒரு பிரிவு இங்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் கைகூடினால், அதற்கு அடித்தளம் அமைத்தவராக முன்னாள் ‘டீன்’ ரத்தினவேல் இருப்பார்.
கடந்த 27.2.2024-ல் மதுரை அரசு மருத்துவமனை ஜைக்கா கட்டிடத் திறப்பு விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யனிடம் விழா மேடையிலேயே மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்தவோ, நோயாளிகள் நடந்து செல்லவோ இடமில்லை என்று ரத்தினவேல் முறையிட்டார். மருத்துவமனையின் ஒரு பிரிவை கொண்டு செல்ல, மத்தியசிறை வளாகத்தை தர வேண்டும் என அவர் கோரிக்கையும் வைத்தார்.
அவரது கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது மருத்துவத்துறை இணை இயக்குநர் ஒருவர், கடந்த வாரம் சிறை வளாகத்தை பார்வையிட்டுள்ளார். இன்னும் மருத்துவத்துறைக்கு இந்த சிறை வளாகத்தைக் கொடுக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கொடுக்காவிட்டாலும், அதற்கான ஆய்வுகளும், ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவும், மருத்துவ மாணவர்கள் விடுதியும் அங்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளது. சென்னையில்கூட மகப்பேறு சிகிச்சைப் பிரிவு அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கிடையாது. அங்கு தனி சிறப்பு மருத்துவமனையாக மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு செயல் படுகிறது. அதுபோன்ற சிறப்பு மகப்பேறு அரசு மருத்துவமனையை மதுரை சிறை வளாகத்தில் அமைக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை செயல்படுத்த தற்போது உள்ள ஆட்சியர், டீன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும். மகப்பேறு மருத்துவப் பிரிவில் தற்போது நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால், இந்த ஒரு மருத்துவ சிகிச்சைப் பிரிவு மட்டும் அங்கு சென்றால்கூட மருத்துவர்கள், பணியாளர்கள், நோயாளிகளுக்கான வாகன பார்க்கிங் மற்றும் பிற வசதிகளை தற்போது உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT