Published : 25 Jan 2025 03:24 PM
Last Updated : 25 Jan 2025 03:24 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்த தடை!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்துவதற்கும் அதை வெளியிடுவதற்கும் தடை விதித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு (கிழக்கு) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:- 1951-ம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, எந்த நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ பரப்பக் கூடாது.

தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். அதாவது, ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்டுள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x