Published : 25 Jan 2025 11:16 AM
Last Updated : 25 Jan 2025 11:16 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் 15 கி.மீ. தூரம் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வடக்கு மீனவன்குளம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலை. இவரது மனைவி சிவகாமியம்மாள் (60). இவர்களது மகன் பாலன் (38). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிவகாமியம்மாளுக்கு கடந்த 11-ம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கிராமத்திலிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சைக்கிளில் 15 கி.மீ. தூரம் பாலன் அழைத்து வந்து சேர்த்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப்பின் சிவகாமியம்மாள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குமுன் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிவகாமியம்மாள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றுமுன்தினம் காலை உணவு அருந்திய அவரை, சிறிது நேரத்தில் காணவில்லை. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது மூன்றடைப்பு பகுதியில் உள்ள பாலத்தில் பாலன், தனது தாயை சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கயிற்றால் கட்டி தனது ஊருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. போலீஸார் அவரை தடுத்து பார்த்தபோது, சிவகாமியம்மாள் உயிரிழந்திருந்தார். ஆனால், தாயார் இறந்தது பாலனுக்கு தெரியவில்லை.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உணவு கொடுத்தபோது அவர் சாப்பிடவில்லை என்பதால் வீட்டுக்கு அழைத்துவந்து விட்டதாக பாலன் போலீஸில் தெரிவித்துள்ளார். சிவகாமியம்மாள் உடலை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT