Published : 25 Jan 2025 06:30 AM
Last Updated : 25 Jan 2025 06:30 AM
சென்னை: கரோனா பேரிடரின்போது பணியாற்றி தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் முந்தைய அரசை வலியுறுத்தினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு மறைந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு எந்த நிவாரணமும் தரவில்லை.
கரோனா பேரிடரில் பணியாற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு தன் குழந்தைகளுடன் 3 முறை சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வேண்டினார். ஆனால் எந்த பயனும் இல்லை. மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு உடனே அரசு வேலை தரப்பட வேண்டும்என சென்னை உயர் நீதிமன்றமே அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
இதற்கிடையே கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அரசை வலியுறுத்தி பேசினார். அப்போது அதற்கு பதிலளித்து அமைச்சர் பேசும்போது, மறைந்த மருத்துவர் விவேகானந்தனுக்கு 2 மனைவிகள் என்றும், அவரது குடும்பத் தில்பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனால்தான் அரசு வேலை தர முடியவில்லை என்றும் முற்றிலும் தவறான தகவலை தெரிவித்தார். இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் உள்ளது.
உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் படும் வேதனை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. நிச்சயம் இதை முதல்வர் விரும்ப மாட்டார்கள். எனவே 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அரசு மருத்துவர்களின் நலனுக்கான முதல் அறிவிப்பாக, அரசு மருத்துவர்களுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதேபோல், அன்றைய தினம் மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் தன் கைகளால் வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT