Published : 25 Jan 2025 07:23 AM
Last Updated : 25 Jan 2025 07:23 AM

மீண்டும் தமிழக பாஜக தலைவராகிறார் அண்ணாமலை? - இம்மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகிறார் என்றும் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பின.

இந்நிலையில், தற்போது பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். அந்தவகையில், செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும் தொடங்கப்பட்டன. அதில் கிளைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் பெயர்களும் அடிப்பட்டன. இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்வாகிறார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறியது: மாவட்ட தலைவர்களுக்கே தேர்தல் இல்லாமல், ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்கு மட்டும் எப்படி தேர்தல் நடக்கும். மாநில தலைவராக ஒருமனதாக மீண்டும் அண்ணாமலையே தேர்வு செய்யப்பட இருக்கிறார். பாஜக மேலிடமும் அதையே விரும்புகிறது. ஜன.26 அல்லது 28-ம் தேதி பல்வேறு மாநிலங்களின், மாநில தலைவர் முதற்கட்ட பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிடும். அதில் தமிழகமும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. அதில், மீண்டும் அண்ணாமலையை நியமித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

தாங்கள் மாநில தலைவராக வந்தால், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று மேலிடத்தில் வானதி, தமிழிசை உள்ளிட்டோர் பேசியிருக்கின்றனர். ஆனால், தேசிய தலைமை அண்ணாமலைக்கே தங்களது ஆதரவு கரங்களை நீட்டியிருக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x