Published : 25 Jan 2025 06:12 AM
Last Updated : 25 Jan 2025 06:12 AM
சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர்.
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் மைதானத்தைச் சுற்றி 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போட்டியைக் காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது.
கட்டணமில்லா பேருந்து பயணம்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா - இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியையொட்டி, வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திடம் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக் கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் அல்லது பிரின்டட் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால், அதை நடத்துநரிடம் காண்பித்து மாநகரப் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) கட்டணமின்றி பயணிக்கலாம்.
போட்டி நடைபெறும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரத்துக்குப் பிறகும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவர். அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானம் வரை மாநகர போக்குவரத்துக் கழக இணைப்பு பேருந்துகள் மாலை 4 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு மின்சார ரயில்கள்: அதேபோல், கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கடற்கரையில் இருந்து இரவு 10.40 மற்றும் 11 மணிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10.20 மற்றும் 10.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT