Published : 25 Jan 2025 05:15 AM
Last Updated : 25 Jan 2025 05:15 AM

தவெகவில் முதல்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: நிர்வாகிகளுக்கு விஜய் படம் பொறித்த வெள்ளி நாணயம்

தவெக தலைவர் விஜய் படம் பொறித்த வெள்ளி நாணயம்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கட்சியின் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

தவெக நிர்வாகிகளை நியமிக்க பணம் பெறப்படுவதாக எழுந்த புகார் எழுந்துள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக விஜய் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர்கள் நியமன பட்டியலை விஜய் வெளியிட்டார்.

அதன்படி, தவெகவின் நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டும், கட்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையிலும், சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று அல்லது இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கு நியமன கடிதத்துடன், வெள்ளி நாணயத்தையும் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் விவரம் வருமாறு: அரியலூர் (அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி) - எம்.சிவக்குமார், ராணிப்பேட்டை கிழக்கு (சோளிங்கர், அரக்கோணம்) - வி.காந்திராஜ், ராணிப்பேட்டை மேற்கு (ஆற்காடு, ராணிப்பேட்டை) - ஜி.மோகன்ராஜ், ஈரோடு கிழக்கு (அந்தியூர், பவானி, பெருந்துறை) - எம்.வெங்கடேஷ், ஈரோடு மாநகரம் (ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி) - எம்.பாலாஜி, ஈரோடு மேற்கு (பவானி சாகர், கோபிசெட்டிபாளையம்) - ஏ.பிரதீப்குமார், கடலூர் கிழக்கு (கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி) - பி.ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கடலூர் தெற்கு (சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்) - எஸ்.சீனுவாசன், கடலூர் மேற்கு (திட்டக்குடி, விருத்தாசலம்) - எஸ்.விஜய், கடலூர் வடக்கு (நெய்வேலி, புவனகிரி) - கே.ஆனந்த், கரூர் கிழக்கு (குளித்தலை, கிருஷ்ணராயபுரம்) - ஜி.பாலசுப்ரமணி, கரூர் மேற்கு (கரூர், அரவக்குறிச்சி) - வி.பி.மதியழகன், கள்ளக்குறிச்சி கிழக்கு (திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை) - ஆர்.பரணிபாலாஜி, கோவை தெற்கு (கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி) - கே.விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாநகரம் (கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்) - வி.சம்பத்குமார், சேலம் மத்தியம் (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு) - ஏ.பார்த்திபன், தஞ்சாவூர் தெற்கு (பட்டுக்கோட்டை, பேராவூரணி) - ஜி.மதன், தஞ்சாவூர் மத்தியம் (திருவையாறு, தஞ்சாவூர்) - ஆர்.விஜய் சரவணன், நாமக்கல் மேற்கு (பரமத்திவேலூர், நாமக்கல், குமாரபாளையம்) - என்.சதீஷ்குமார் ஆகியோரும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட இணை செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. துணை செயலாளர்கள் பதவியைப் பொருத்தவரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கட்சியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மீதமுள்ள மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தேநீர் விருந்தில் பங்கேற்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து நடைபெறும். ஆளுநர் அழைப்பின்பேரில், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்பார்கள்.

அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி, நாளை மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்கள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஆளுநர் மீதான அதிருப்தி காரணமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே, குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கும் ஆளுநர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக தலைவர் விஜய் கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x