Published : 25 Jan 2025 05:04 AM
Last Updated : 25 Jan 2025 05:04 AM
பெரியார் மற்றும் பிரபாகரனை கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர்.
அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுத பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை.
2009-ம் ஆண்டு இறுதிப் போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினை செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், சாதி மறுப்பு திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன.
பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளை செயல்படுத்திய பேரன் பிரபாகரனை சந்தித்து பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், பெரியாரைப் பற்றியோ, பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாத போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவு சமதர்ம பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT