Published : 24 Jan 2025 06:23 PM
Last Updated : 24 Jan 2025 06:23 PM
மதுரை: “நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும்” என நவாஸ்கனி எம்.பி சவால் விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவுக்கு ஆடு, கோழிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதால், அது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணையரிடம், தர்காவுக்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய திருப்பரங்குன்றம் சென்றோம். தர்காவுக்கு சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு. ஆடு, கோழிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டது. நாங்கள் ஏற்கெனவே உள்ள நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்க அனுமதிக்குமாறு காவல் ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளேன்.
நான் திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்து, எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களையும், பொய்களையும் சொல்லி வருகிறார். தற்போது லண்டன் போய் படித்து வந்தும் பொய் பேசி வருகிறார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. நான் வக்புவாரிய தலைவர், மணப்பாறை எம்எல்ஏ வக்பு வாரிய உறுப்பினர். தர்காவுக்கு செல்பவர்களுக்கான வசதி குறைபாடுகளை சரிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அந்த வகையில் அங்கு சென்றோம். மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இருப்பினும் பாஜகவினர் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
தர்காவுக்கு செல்பவர்கள் என்ன உணவு சாப்பிடுகிறார்கள் என பாஜகவினர் ஏன் கேட்கிறார்கள். மலைப்பகுதிக்கு ஆடு, கோழிகளை கொண்டு செல்லத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைத்த சாப்பாட்டை கொண்டுச் செல்ல தடையில்லை. இதனால்தான் சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதை எந்தக் கட்சியும் பேசாதபோது பாஜக மட்டும் பேசுவது ஏன்? அரசியல் செய்ய வேண்டும், பிரிவினையை ஏற்படுத்த வேண்டும், ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
திருப்பரங்குன்றத்தில் நடப்பது மதுரை மக்களுக்கு தெரியும். என்னையும், மணப்பாறை எம்எல்ஏயையும் கைது செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார். தொடர்ந்து பொய்யான தகவல்களை சொல்லி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்களை தான் கைது செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு பணிந்து தான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT