Published : 24 Jan 2025 04:48 PM
Last Updated : 24 Jan 2025 04:48 PM
திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில், அவ்வப்போது பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. அதன் ஒருபகுதியாக, வீட்டுமனைப் பட்டா தொடங்கி அடுக்குமாடி குடியிருப்பு வரை பல்வேறு மோசடிகள் தொடர்பாக, வருவாய் துறை அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். அதேசமயம், மறுபுறம் மனு அளித்தும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பு மகளிரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் உரிமைத் தொகைக்காக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 150 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூறும்போது, “ஒவ்வொரு பகுதியிலும் இருந்து மாவட்ட அளவில் பொதுமக்கள், மகளிர் உரிமைத்தொகைக்கு கடந்த முறை வழங்கப்பட்ட விண்ணப்பத்தையே நகல் எடுத்து, புதிதாக தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்கள் கூறியதால்தான் பலர் வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் தெளிவாக அறிவிப்புகள் வெளியாகவில்லை. அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றால், புதிதாக விண்ணப்பிப்பவர்களா அல்லது ஏற்கெனவே விண்ணப்பித்து வாய்ப்பை இழந்தவர்களா என்பது தொடர்பாக தெளிவுப்படுத்தப்படவில்லை.
இதனால், குழப்பத்துக்குள்ளான மகளிர் பலரும் ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்து உரிமைத்தொகை கோருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ள தரகர்களும் தயாராக உள்ளனர். அதாவது, வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வலம் வரும் இடைத்தரகர்கள், அப்பாவி மக்களை ஏமாற்றி ஒரு மனுவுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை வசூலிக்கின்றனர்.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. புதிதாக பலர் நம்பிக்கையுடன் விண்ணப்பிக்க வருகிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடிவதில்லை. எனவே, இடைத்தரகர்களிடம் இருந்து அப்பாவி பொதுமக்களின் பணத்தை காப்பாற்ற, மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய் துறை அலுவலகங்களில் உரிய தகவல்களை பொதுமக்கள் பார்வையில் வைத்து, அவர்களை பொருளாதார இழப்பில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT