Last Updated : 24 Jan, 2025 01:07 PM

2  

Published : 24 Jan 2025 01:07 PM
Last Updated : 24 Jan 2025 01:07 PM

“ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்” - சீமான் 

கோவை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்துக்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல். பிரச்சாரத்துக்கு செல்ல விமான மூலம் இன்று (ஜன.24) காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். அவர்கள் 32 கட்சிகளுடன் போட்டியிடுகிறார்கள். ஆனால் அவர்களால் 150 பேரை கூட திரட்ட முடியவில்லை. இடைத்தேர்தலை பொருத்தவரை நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் பெறுவீர்கள்? என்று கேட்கிறீர்கள். கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்துக்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம்.

பெரியார் குறித்து இப்போது எதிராக பேசுவது ஏன் என கேட்கிறீர்கள்? தலைவலி வரும்போது தான் மாத்திரை போட முடியும். பெரியாரை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் தான் இப்போது பேசுகிறார்கள். பெரியாரை அவர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். பெரியார் பற்றி பேசுகிறவர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பேசி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே? நீங்கள் பெரியாரை திராவிட குறியீடாக பார்க்கிறீர்கள். நாங்கள் பிரபாகரனை தமிழ் தேசியத்தின் பெரும் குறியீடாக பார்க்கிறோம்.

திராவிடம் என்று கூறுபவர்கள் 5500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தான் இரும்பை கண்டுபிடித்தார்கள் என்று கூறுகிறார்கள். இப்போது திராவிடர்கள் எங்கே போனார்கள்? தமிழை காத்து வளர்க்க நம் முன்னோர்கள் போராடி உள்ளனர். ஆனால் அவர்களை விட்டுவிட்டு ஒருவரை மட்டும் முன் நிறுத்துவதைத் தான் கேள்வி கேட்கிறோம். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்குள் நுழைய கியூ ஆர் கோடு கட்டாயமாக்கி இருப்பதாக கூறுகிறார்கள். அதை இப்போது தான் செய்துள்ளார்கள். தமிழகத்தில் ஒரு லட்சம் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சினையில் பாமக போன்ற கட்சிகளுக்கு அனுமதி மறுத்தது ஏன்?

எனது வீட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். எனது படத்துக்கு உள்ளாடை அணிவித்து அவமதிப்பு போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். சபாநாயகர் தம்பி ஞானசேகரன் என்று கூறுகிறார். நீங்கள் எதைப் பற்றியும் பேச அருகதை இல்லாதவர்கள். நாங்கள் திராவிடம் ஒழிக என்று பேசவில்லை. தமிழ் வாழ்க என்றுதான் கூறுகிறோம். இன்று எனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் என்னை அரசியல் அனாதையாக ஆக்காமல் விடமாட்டோம் என்று கூறுகிறீர்கள்.

யார் அரசியல் அனாதை? நான் தைரியமாக தனித்து நிற்கிறேன். நாம் தமிழர் கட்சி இன்று அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருக்கிறது. யாரை அரசியல் அனாதையாக்குவோம் என்கிறீர்கள்? நான் முன்பு தொண்டர் படையோடு வருவேன். டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி ரத்து செய்வதை அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடக்கூடாது. அதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. இந்த வெற்றி தன்னெழுச்சியாக போராடிய அந்த மக்களின் வெற்றி.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x