Published : 24 Jan 2025 12:15 PM
Last Updated : 24 Jan 2025 12:15 PM
சென்னை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை அசுத்தப்படுத்திய ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார். பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார்.
அப்படிக் கூறும் காணொளியிலேயே இறுதியாக, தனது ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில், அசைவ உணவு உண்டதையும் ஒப்புக்கொள்கிறார்.
நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற நவாஸ் கனி, அதனை முழுமையாக மீறியிருக்கிறார். மேலும், திருக்கோயில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் ஒரே நோக்கம், இந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே.
தான் கூறியதைப் போல, கோயில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக அவர் பதவி விலகுவதோடு, தமிழ் மக்களின் மனம் புண்படும்படி, முருகப்பெருமான் திருக்கோயிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT