Published : 24 Jan 2025 09:29 AM
Last Updated : 24 Jan 2025 09:29 AM

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: போராட்டம் நடத்திய மக்களுக்கு குவியும் வாழ்த்து!

மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்துக்கு மக்களின் எழுச்சிமிக்க போராட்டமே முக்கிய காரணம் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நவ.19-ல் அறிக்கை வெளியிட்டேன்.

நவ.21-ல் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன், டிச.3-ல் நாடாளுமன்றத்தில் பேசினேன். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாயப் பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேலு ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் டங்ஸ்டன் ரத்து திட்ட அறிவிப்பு மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாக இருக்கலாம் ஆனால் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக அனைத்து கிராமங்களிலும் கைவிடுவதாக முழு விவரம் இடம்பெறவில்லை.

டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுப்பை விட்டுவிட்டு தமிழகத்தில் மற்ற பகுதிகளில் இத்திட்டத்தை நடை முறைப்படுத்த எவ்வித முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது எனகோரிக்கை விடுக்கிறோம். இப்போராட்டத் தில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x