

சென்னை: ‘விமானத்தில் ரூ.1.5 கோடி மதிப்பு தங்கம், ஐ-போன் பறிமுதல் - 13 பேர் சிக்கினர் - 4 அதிகாரிகள்மீது நடவடிக்கை’ என்ற தலைப்பில் கடந்த 20-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’யின் 5-வது பக்கத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
இச்செய்தி தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கம்: இடமாறுதல் செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தங்க கடத்தல்காரர்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உண்மை தகவலை சரிபார்க்காமல் செய்தியில் தவறான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டிருப்பது அவர்களின் தனியுரிமை மீறிய செயல் மட்டுமல்ல, அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்தி அவர்களின் தொழில் நம்பகத்தன்மையையும் அவமதிப்புக்குள்ளாக்கும் செயலும்கூட.
அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என்பது துறை ரீதியில் எடுக்கப்படும் அன்றாட நடைமுறை ஆகும். எனவே, செய்தியில் குறிப்பிடப்பட்டிருப் பதுபோல், இடமாற்றலுக்கும் கடத்தல் சம்பவ நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த தவறான செய்தியால் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் மனவலிமை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அலுவலக நடைமுறையான இடமாறுதல் நடவடிக்கைக்கு வேறு ஒரு சம்பவத்தை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டிருப்பது கவலை அளிக்கக்கூடியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்நோக்கம் கிடையாது: சென்னை விமான நிலைய வளாகத்தில் பரவிய நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே, அதிகாரிகளின் இடமாற்றலை குறிப்பிடும்போது, கடத்தல் சம்பவத்தை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது மத்திய சுங்கத்துறை மறுப்பு அறிக்கை அளித்துள்ள நிலையில், சுங்கத்துறையின் கருத்தை கேட்டறிந்த பிறகே குறிப்பிட்ட செய்தியை வெளியிடுவது குறித்து முடிவு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
எனவே, அந்தச் செய்தியை வெளியிட்டதற்காக வருந்துகிறோம். மற்றபடி இந்தச் செய்தியை வெளியிட்டதில் ‘தி இந்து தமிழ் திசை’க்கு எந்த உள்நோக்கமும், யாருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்