Published : 24 Jan 2025 08:54 AM
Last Updated : 24 Jan 2025 08:54 AM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை பிப்ரவரியில் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், மாவட்ட தலைவர்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பெற விருப்பம் உள்ளவர்கள், இணைய வழியில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று செல்வப்பெருந்தகை அண்மையில் அறிவித்தார். இதற்குத்தான் மாவட்ட தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஈவிகேஎஸ் மற்றும் மன்மோகன் சிங் படத்திறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. முதல்வர் கலந்து கொண்ட இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டத் தலைவர்களுடனான இணைய வழி கூட்டத்தைக் கூட்டி இருந்தார் செல்வப்பெருந்தகை. ஆனால், அவர் மீதான அதிருப்தியின் காரணமாக இந்தக் கூட்டத்தை சென்னை மாவட்ட தலைவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து எதிர்ப்பைக் காட்டினர்.
இதையடுத்து, கிராம கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கான பயிலரங்கம், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. அப்போது மாவட்ட தலைவர்கள் 25 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை, 17 மாவட்ட தலைவர்கள் அஜோய்குமாரை நேரில் சந்தித்து வழங்கினர். அதில், ‘செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகளுக்கான விருப்ப மனு பெறுவதை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக அதிருப்தி மாவட்ட தலைவர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “தேர்தலில் வென்று பதவிக்கு வந்துள்ள மாவட்ட தலைவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எங்களது பதவிகளுக்கு நாங்கள் பதவியில் இருக்கும்போதே, விருப்ப மனு பெறப்படுகிறது. கட்சிக்காக சொந்தக் காசை செலவழித்து போராட்டங்களை நடத்தி வரும் எங்களிடம் கருத்துக் கேட்காமல் விருப்ப மனு பெறுவதை ஏற்க முடியாது.
அகில இந்திய தலைமையை கலந்தாலோசிக்காமல் செல்வப்பெருந்தகை இதைச் செயல்படுத்துகிறார். அதனால் விருப்ப மனு பெறுவதை நிறுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று, அகில இந்திய காங்கிரஸால் ஒப்புதல் பெறப்பட்ட பதவிகளின் காலம் முடிந்த பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டும். இதைத்தான் அஜோய்குமாரிடம் வலியுறுத்தினோம்” என்றனர்.
இது தொடர்பாக பேசிய மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், “கட்சி பதவிக்காக கட்டணம் வசூலிப்பது வேறெந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாக இருக்கிறது. மாவட்டத்தில் உள்ள தலா 4 கமிட்டி உறுப்பினர்கள் பரிந்துரையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். மாநில பதவிகளும் பரிந்துரை அடிப்படையில் தான் நடக்கும். ஆனால், இப்போது புகுத்தும் நடைமுறையால் காசு இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பதவி கிடைக்கும்.
இது கட்சிக்காக உழைப்பவர்களை சோர்வடையச் செய்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கும்” என்றார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது, “கட்சியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பது காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் முடிவு. உதய்பூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. அதைத் தான் செயல்படுத்துகிறேன். ஒரு காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைமையின் உத்தரவை செயல்படுத்த வேண்டும். அந்த உத்தரவை மதிக்காதவர்கள் காங்கிரஸில் இருக்கவே தகுதியற்றவர்கள்.
கட்சியில் மாற்றம் கொண்டு வந்தால் தான் தகுதியான நிர்வாகிகளை வெளிக்கொண்டுவர முடியும். தற்போது பெறப்படும் விருப்ப மனு மூலம், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பு இல்லை. கட்சிக்காக உழைக்காமல் நீண்ட காலமாக ஒரே பதவியில் இருப்பவர்கள், அதே பதவியில் தொடர அனுமதிக்க முடியாது” என்றார். கலகம் செய்வதும், கோஷ்டி சேர்த்து கொடி பிடிப்பதும் நடந்தால் தான் அது காங்கிரஸ். இப்போது செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொடி பிடித்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்!
- ச.கார்த்திகேயன்/ என்.சன்னாசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT