சுற்றுலா பொருட்காட்சியை காண மக்கள் ஆர்வம்: சென்னை தீவுத்திடலில் 16 நாட்களில் 1.5 லட்சம் பேர் பார்த்தனர்
சென்னை: தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியை கடந்த 16 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் 49- வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து, நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய, மாநில அரசுத்துறை அரங்குகள், தனியார்துறை அரங்குகள் என 84 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் போன்றவை உள்ளன.
சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், அவதார் உலகம், மென் காட்சியகம், மிரள வைக்கும் பேய் வீடு 3-டி திரையரங்கம், அறிவியல் உலகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் சிறுவர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான அலுவலக நாட்களில் தினமும் பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 10 மணி வரையிலும் பொருட்காட்சியை காணலாம்.
வரிசையில் நிற்க முடியாதவர்கள், யுபிஐ பேமென்ட் முறையிலும் பணம் செலுத்தி எளிதில் நுழைவுச்சீட்டை பெறலாம். பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் அதிக ஆர்வத்துடன் பொருட்காட்சியை காண வருகின்றனர். ஜனவரி 21-ம் தேதி வரை இந்த பொருட்காட்சியை சிறுவர்கள், பெரியவர்கள் என ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 377 பேர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
