Published : 24 Jan 2025 06:08 AM
Last Updated : 24 Jan 2025 06:08 AM

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் - ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை: அரசியல் தலைவர்கள் புகழாரம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆளுநர் கூறியிருப்பதாவது: தேசிய சுதந்திர போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோரை ஈடுபடுத்த வைத்த ஒரு உயர்ந்த தேசியவாதத் தலைவரும் தொலைநோக்குப் பார்வையாளருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நாடு நெஞ்சார்ந்த மரியாதை செலுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உட்பட எண்ணற்ற ஆண்களும், பெண்களும் இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) கீழ் இந்தியாவின் சுதந்திரத்துக்காக வீரத்துடன் போராடினர்.

அவரது புரட்சிகர லட்சியங்கள் 1946-ம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தன. இது ஆங்கிலேயர்களை நடுங்கச் செய்ததுடன் இந்தியாவிலிருந்து அவர்கள் வெளியேறுவதையும் நமது தேசிய சுதந்திரத்தை விரைவாகவும் கிடைக்க வைத்தது. நேதாஜியின் தொலைநோக்குப் பார்வையும் மரபும் நம்பிக்கை நிறைந்த, திறமையான மற்றும் சுயசார்பு, பாரதத்துக்கான தேடலில் ஈடுபட தொடர்ந்து நமது இளைஞர்களைத் தூண்டி வருகின்றன. ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ-க்கள் த.வேலு, ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறைச் செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் ச.செல்வராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, சுபாஷ் சந்திர போஸுக்கு புகழாரம் சூட்டும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு ராணுவத்தையே கட்டமைத்து, அந்நிய ஏகாதிபத்தியத்தை திக்குமுக்காடச் செய்த மாவீரர், இன்றளவும் நம் ரத்தத்தில் தேசபக்தியை ஏற்படுத்தும் "நேதாஜி" என்ற ஒற்றைச்சொல்லுக்கு சொந்தக்காரர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: எந்தச் சூழ்நிலையிலும், ஆங்கிலேய அரசுக்கு அடிபணியாமல், நிபந்தனையற்ற தேசவிடுதலையே நோக்கமாகக் கொண்டிருந்தவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, விடுதலை போர் தொடங்கிய சுபாஷ் சந்திரபோஸின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் எல்லையுண்டா?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தாயகத்தின் சுதந்திரத்துக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த வீரர் நேதாஜி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x