Published : 24 Jan 2025 06:14 AM
Last Updated : 24 Jan 2025 06:14 AM

ஒருங்​கிணைந்த முனையமாக பிராட்வே பேருந்து நிலையம்: சிறிய மாற்றங்களுடன் புதிய டெண்டர் வெளி​யீடு

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம், பல்வேறு வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக, சிறிய மாற்றங்கள் செய்து புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதற்கிடையே, பேருந்து நிலையம், மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன், வணிக வளாகங்களோடு ஒருங்கிணைந்த முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் மாற்றப்பட உள்ளது. இதற்காக, டெண்டரில் சிறிய மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் கூறியதாவது: பிராட்வேயில் தற்போதுள்ள பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த முனையமாக மாற்றப்பட உள்ளது. 4.42 ஏக்கர் பரப்பளவில் 10 மாடியில் ஒரு வணிக வளாகமும், பேருந்து நிலையத்துடன் கூடிய 8 மாடியில் ஒரு கட்டிடமும் அமைக்கப்பட உள்ளது.

அருகில் உள்ள மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையத்தையும் இங்கிருந்து இணைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். பயணிகள் வந்து செல்ல வசதியாக, நகரும் படிக்கட்டுகள், ஸ்கைவாக், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும்.

ரூ.650 கோடியில் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள கடந்த வாரம் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்து, அடுத்த 3 மாதங்களில் பணிகளைத் தொடங்கி, வரும் 2028-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x