Published : 24 Jan 2025 03:04 AM
Last Updated : 24 Jan 2025 03:04 AM
சென்னை: பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ல் கொண்டுவந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி தாக்கல் செய்தார்.
விவாதத்துக்கு பிறகு, 11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள், உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்வது, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலாவது மசோதா தமிழக அரசின் சட்டம் என்பதால், ஆளுநர் ஒப்புதல் அளித்ததும், அரசிதழில் வெளியிடப்பட்டு உடனே அமலுக்கு வந்துள்ளது. மற்றொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த ஆளுநர், அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT