Published : 24 Jan 2025 01:11 AM
Last Updated : 24 Jan 2025 01:11 AM
சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவப் படையை வழி நடத்தியவருமான நேதாஜிக்கு முக்கிய ஊக்க சக்திகளாக இருந்தவர்கள் தமிழர்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 128-வது பிறந்த நாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வுகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
பின்னர், விழா மேடையில் நேதாஜியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆளுநர், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக 9 நவக்கிரகங்கள் மற்றும் அதற்கான தல விருட்ச மரங்களுடன் கூடிய பூங்காவைத் திறந்துவைத்தார்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தீவிரப் போராட்டத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் விரைவாக கிடைத்தது. இல்லையெனில் சுதந்திரம் கிடைப்பது மேலும் தாமதமாகி இருக்கும். நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாட்டின் விடுதலைக்காக போராடினர். ஆனால், சுமார் 300 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் அடையாளம் காண வேண்டும். மேலும், நாட்டுக்காக இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நாம் போற்றி கவுரவிக்க வேண்டும்.
தமிழகத்துக்கும், நேதாஜிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நேதாஜிக்கு முக்கியமான ஊக்க சக்திகளாக இருந்தவர்கள் தமிழர்கள். அவரது படையில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். ஆனால் தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி குறித்து வரலாற்றுக் குறிப்புகள் முழுமையாக இல்லை. நேதாஜிக்கு தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முக்கியக் காரணியாகத் திகழ்ந்தார்.
இந்தியாவை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷ்காரர்கள், விவசாயம், கட்டுமானம் மற்றும் இதர வேலைகளுக்காக அவர்களது ஆளுகையின் கீழ் இருந்த மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு லட்சக்கணக்காக தமிழர்களை அடிமைகளாக அழைத்துச் சென்றனர். அங்கிருந்த தமிழர்களும் நேதாஜியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு அவரது படையில் சேர்ந்தனர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது தாரக மந்திரம். ஆனால், இந்திய சுதந்திரத்துக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையைத்தான் உருவாக்கினார்கள். குறிப்பாக, ஜாதியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அதையும் மீறி தலைவரானாலும், அவரால் அந்தப் பதவியில் இருக்க முடிவதில்லை. அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பல்கலை. துணைவேந்தர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்திய தேசிய ராணுவ வீரர்கள் குறித்து எழுதப்பட்ட 2 நூல்கள் வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT