

மதவெறியுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி.யை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமீது, வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி ஆகியோர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனியுடன் மலைக்குச் சென்ற சிலர், மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று திருப்பரங்குன்றம் வந்தார். அங்குள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு சென்ற அவர், காசிவிசுவநாதர், விசாலாட்சி அம்மனை தரிசித்தார். பின்னர் அடிவாரத்துக்குத் திரும்பி, அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் கந்தர்மலை தொடர்பான வழக்கு 100 ஆண்டு பழமையானது. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்துள்ளது. 1931-ல் லண்டனில் உள்ள பிரிவிக் கவுன்சில் தீர்ப்பில், இந்த மலை முழுவதும் முருகனுக்கே சொந்தமானது என்று சொல்லப்பட்டுள்ளது. 1994-ல் தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் முஸ்லிம்கள் பிறை கொடி கட்டினர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 1931-ல் என்ன நிலையோ அதுவே தொடர வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
தற்போது எம்.பி.யுடன் சென்றவர்கள் மலைக்கோயில் படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதன்மூலம், இந்துக்களுடன் அவர்கள் மோத திட்டமிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. சிக்கந்தர் மலை என்று கூறி, திருப்பரங்குன்றம் கந்தர் மலைக்கு நவாஸ்கனி எம்.பி. மதவெறி நோக்குடன் வந்துள்ளார். அவரைக்கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ வெளியிட்டவர் மீது வழக்கு: கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் வந்த நவாஸ்கனி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கோகுல் பாலாஜி என்பவரும் எம்.பி.யிடம் கேள்வி கேட்டுள்ளார். இதை திருப்பரங்குன்றம் பகுதி செய்தியாளர்கள் கண்டித்தனர். இதனால் அவர் செய்தியாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டார். இதுகுறித்த புகாரில் கோகுல்பாலாஜி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: கோவையில் நேற்று நடைபெற்ற இந்து முன்னணி மாநகர் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறுவது இந்து சமுதாய மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். மேலும், சிலர் மலை படிக்கட்டுகளில் அசைவ உணவை சாப்பிட்டுள்ளனர். இது மதக்கலவரத்தை தூண்டும். எனவே, தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். இது விவகாரம் தொடர்பாக வரும் பிப். 4-ம் தேதி இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்து முன்னணி மாநில மாநாடு ஜூன் 8-ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்க உள்ளனர். வரும் 11-ம் தேதி தைப்பூச விழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்