

வருமான வரி சோதனை நடத்த தேவையில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும் என்று சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வள்ளுவருக்கு சிலை வைத்ததால் மட்டுமே அவரை சொந்தம் கொண்டாடிவிட முடியாது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் வள்ளுவர் சொந்தம். தனிப்பட்ட யாரும் அவரை உரிமை கொண்டாட முடியாது. மின் கட்டண உயர்வு, வரி வசூல் பிரச்சினை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்றவை 2026 தேர்தலில் எதிரொலிக்கும்.
கூட்டணி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம் நேரடியாகப் பேசினாலே கூட்டணி அமைந்து விடும். வருமான வரித் துறை சோதனை நடத்தித்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரம் இரு சமுதாயத்துக்கு இடையேயான பிரச்சினை. இதில் அரசியலை புகுத்தக் கூடாது. ராமநாதபுரம் எம்.பி., மணப்பாறை எம்எல்ஏ போன்றோர் திருப்பரங்குன்றம் சென்றதால்தான், நாங்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏ கருத்து: கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக அரசை அகற்ற வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் கருதுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சியினரும் புறக்கணித்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு மாற்று அதிமுகதான். கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே அதிமுக வரலாற்றில் இடம் கிடையாது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு மட்டுமல்ல, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தேர்தல் நெருங்கும்போது ஏற்படும்" என்றார்.