

திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கல் குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களுரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளருமான ஜகபர் அலி(56), கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு வந்தால் கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், ஒட்டுநர் காசிநாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையாவை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், திருமயம் அருகேயுள்ள நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் ராமையா நேற்று சரணடைந்தார். அவரிடம் ஏடிஎஸ்பி முரளிதரன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விசாரணை அதிகாரி நியமனம்: இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். திருமயம் போலீஸாரின் விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி அதிகாரியிடம் வழங்கப்படும். பின்னர், சம்பவ இடம், கல் குவாரி உள்ளிட்ட இடங்களுக்கு புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் நேரில் சென்று விசாரணையில் ஈடுவார்கள் என்று தெரிகிறது. மேலும், விசாரணையை இன்றே தொடங்கவிருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.