Last Updated : 23 Jan, 2025 04:12 PM

3  

Published : 23 Jan 2025 04:12 PM
Last Updated : 23 Jan 2025 04:12 PM

“ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை” - நயினார் நாகேந்திரன் 

திருநெல்வேலி: “தமிழகத்தில் ரெய்டு நடத்திதான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் பாஜகவுக்கு இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்” என்று தமிழக சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-வது பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய: ”“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லையென்றால் விடுதலை என்பது இந்திய திருநாட்டுக்கு எளிதில் கிடைத்திருக்காது.

பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. அவர் எந்த நேரத்தில் எது போன்ற கருத்தை தெரிவித்தார் என்பது தெரியாது. அவர் தொடர்பான புத்தகத்தை நான் படித்தது கிடையாது. படித்து பார்த்தால்தான் அவர் குறித்து பேச முடியும். திருவள்ளூவர் 5 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை உடையவர். தமிழக முதலமைச்சர் 70 வயதைதான் கடந்துள்ளார். வள்ளுவருக்கு சிலை வைத்தால் மட்டும் அவர் தனக்கு சொந்தம் என்று யாரும் சொல்ல முடியாது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் திருவள்ளுவர் சொந்தம். தனிப்பட்ட யாரும் அவரை உரிமை கொண்டாட முடியாது.

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தனியாருக்கு குத்தகை விடுவதை அனுமதிக்க முடியாது. அரசு செய்யும் அனைத்து நல்ல திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் எதிரி கட்சி அல்ல, எதிர்க்கட்சி தான். தமிழகத்தில் கடன் கட்டுக்குள்தான் இருக்கிறது என 3 மாதங்களுக்கு பின்னர் தமிழக அரசால் சொல்ல முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லாத நிலையில்தான் வரி வசூல் தாமத கட்டணம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கூடுதலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

2026 தேர்தலில் அரசின் கட்டண உயர்வு, வரி வசூல் பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் கட்டாயம் எதிரொலிக்கும். எனது தொகுதியில் மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து சட்டப் பேரவையில் கேட்டால் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்களின் பிரச்சினைகள் முழுவதுமாக நிறைவேறியதா என்றால் அது இல்லை. கூட்டணி குறித்து எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும். வருமானவரித் துறை சோதனை உள்ளிட்டவற்றை நடத்தித்தான் கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை.

திருப்பரங்குன்றம், சிக்கந்தர் மலை என்ற விவகாரம் இரு சமுதாயத்திற்கு இடையேயான பிரச்சினை. இந்த விவகாரத்தில் அரசியலை புகுத்த கூடாது. ராமநாதபுரம் எம்பி, மணப்பாறை எம் எல் ஏ போன்றோர் அந்த பிரச்சினையை கையில் எடுத்து அங்கு சென்றதால் நாங்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஆ. முத்துபலவேசம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x