போக்குவரத்து கழகங்களை சீரமைக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்

போக்குவரத்து கழகங்களை சீரமைக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் தலைமை வகித்தார்.

சம்மேளன பொருளாளர் சசிகுமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை, பொதுச்செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி, மார்க்சிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஏராளமான தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேருந்துகளை மறித்து நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதேபோல், தமிழகம் முழுவதும் 24 பேருந்து நிலையங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஆறுமுகநயினார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சேவை நோக்கில், நஷ்டம் வரும் என தெரிந்தே 10 ஆயிரம் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகின்றன.

இதில் ஏற்படக்கூடிய இழப்பு சுமார் ரூ.45 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கவில்லை. இதனால் ரூ.30 ஆயிரம் கோடி கடன் வாங்கியும், தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை செலவு செய்தும் நிர்வாகம் நடத்தப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. தொழிலாளர்களின் பணத்தை செலவு செய்ததால், ஓய்வுபெற்ற 8 ஆயிரம் பேருக்கு சுமார் ரூ.3,500 கோடி நிலுவை வழங்க வேண்டியிருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. வாரிசு வேலை கொடுக்கப்படவில்லை. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையையும் தொடங்கவில்லை.

அமைச்சர் பேச்சில் முரண்: பணியாளர்களை நியமிக்காமலேயே நியமிக்கப்படுவதாகவும், தனியார் மயத்தை முன்னெடுத்துவிட்டு தனியார் மயம் இல்லை என்றும் அமைச்சர் சொல்கிறார். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்க வேண்டும் என முந்தைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அப்போதைய அரசிடம் பட்டியல் ஒன்றை அளித்தார். அதை நிறைவேற்றக் கோரியே போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in