Published : 23 Jan 2025 05:43 AM
Last Updated : 23 Jan 2025 05:43 AM

நேரடி நெல் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை ஆதரித்தால் தேர்தலில் திமுகவை எதிர்ப்போம்: பி.ஆர்.பாண்டியன்

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில், உண்ணாவிரதப் போராட்டம் எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு, மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: நேரடி நெல் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகள் களம் காண்பார்கள் என்று தமிழ்நாடு சம்யுத்த கிசான் மோர்ச்சா மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் எஸ்கேஎம் (என்பி) தலைவர் ஜக்ஜித்சிங் டல்லேவால் உயிரை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

விவசாயக் கடன்களை நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்தல், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் கார்ப்பரேட் ஆதரவு சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

நேரடி நெல் கொள்முதலுக்கும் நெல் அரவைக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியாரை (கார்ப்பரேட்) எதிர்பார்ப்பது கண்டிக்கத்தக்கது. எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நெல் ஈரப்பதம் எப்படி இருந்ததோ அப்படியே கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அந்த நிலை இல்லை.

நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதுபோல விவசாயிகளின் இதர கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

இந்த நி்லை நீடித்தால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும், ஆட்சிக்கும் எதிராக விவசாயிகள் களம் காண்பார்கள். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. அதேநேரம் திமுக ஆட்சிக்கு எதிராக 5 லட்சம் போராட்டம் அனுமதி இல்லாமல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அமைப்பின் தலைவர் பி.அய்யாக்கண்ணு பேசும்போது, “விவசாயிகளின் 11 அம்சக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். வேளாண் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும். அதுவரை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் 100 விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்துவார்கள்" என்று தெரிவித்தார். மாலையில் இணை ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ராமகவுண்டர் உண்ணாவிரத்தை நிறைவுசெய்து வைத்துப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x