Published : 23 Jan 2025 06:10 AM
Last Updated : 23 Jan 2025 06:10 AM
சென்னை: வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னையில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.
அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்வானது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட்டு வருகின்றன. இவற்றை காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் ஜன.25-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களைப் பார்க்கலாம். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்களை மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும். இந்நிகழ்வை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா மையத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் திரண்ட மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் நேர்கோட்டில் இடம்பெற்றிருந்த கோள்களைக் கண்டு ரசித்தனர். இவற்றில் வெள்ளி, வியாழன், சனி ஆகிய கோள்களை வெறும் கண்களாலேயே பொதுமக்கள் கண்டறிய ஆய்வாளர்கள் உதவினர்.
இதைத் தொடர்ந்து செவ்வாய் மாலை நேரத்தில் மெதுவாக மேலே வரத் தொடங்கிய நிலையில், இரவு 9 மணி அளவிலேயே சற்று தெளிவாகக் காண முடிந்தது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கி வாயிலாகவும் சற்று மங்கலான நிலையிலேயே காண முடிந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் இ.கி.லெனின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``பிப்ரவரி மாத தொடக்கத்தில் சந்திரன், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும். முன்னதாக கடந்த ஜூன் 3-ம் தேதி செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தன.
இதுபோன்ற கோள்களின் அணிவகுப்பு (7 கோள்களின் அணிவகுப்பு) வரும் பிப்.28-ம் தேதியும், ஆக.11-ம் தேதியும் (6 கோள்களின் அணிவகுப்பு) நிகழவுள்ளது. அதன்பிறகு இதுபோன்ற நிகழ்வு 2040-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT