

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தமிழக காவல் துறையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த 28 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதி கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தமிழக காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியில் சோ்ந்தவா்கள், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பதவி உயா்வு பெற்று பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவா்கள் ஐபிஎஸ் அந்தஸ்து பெற தகுதி அடைந்தும், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருந்தது.
மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் அனுமதி கிடைக்காததாலேயே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, மத்திய பணியாளா் தோ்வாணையத்தில் இதுதொடா்பாக நடைபெறும் ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடக்காமல் இருந்தது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில், தமிழக அரசு சாா்பில் உள்துறை செயலர் தீரஜ்குமாா், டிஜிபி சங்கா் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்த, தமிழக காவல் துறையை சேர்ந்த 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்குவதற்கான அரசாணையை மத்திய அரசு கடந்த 21-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனால், அந்த அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.