குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸார் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸார் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை
Updated on
1 min read

வேலியே பயிரை மேய்வது போல குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல் துறையினருக்கு எதிரான வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலதிபரான ஜூனைத் அகமது என்பவர் தனது ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.20 லட்சம் கொடுத்து அனுப்பியுள்ளார். பணத்துடன் சென்னைக்கு வந்த முகமது கவுஸை சீருடையில் இருந்த திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ ராஜாசிங் அது ஹவாலா பணம் எனக்கூறி வழிமறித்துள்ளார். பின்னர் வருமான வரித்துறையில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் உதவியுடன் முகமது கவுஸை காரில் கடத்தி மிரட்டி ரூ. 20 லட்சத்தில் ரூ. 5 லட்சத்தை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதுதொடர்பாக முகமது கவுஸ் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஆய்வு செய்து சிறப்பு எஸ்ஐ ராஜாசிங் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம், ‘‘இந்த வழக்கில் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சன்னிலாய்டு என்ற சிறப்பு எஸ்ஐ-யும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, "வேலியே பயிரை மேய்வது போல இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிரான வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என வேதனை தெரிவித்தார். மேலும் விசாரணையை வரும் ஜன.28-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in