

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு தள்ளுபடி விவகாரம் தொடர்பாக, தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப். 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடத்தும் அலுவலராக, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மணீஷ் நியமிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.
வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த வி.பத்மாவதி என்ற சுயேச்சை வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மட்டுமே சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முடியும் என்பதால், பத்மாவதியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா விசாரணை மேற்கொண்டார். மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், வேட்பாளர்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்தது.
தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ் நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டார். அவருக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.