Published : 23 Jan 2025 12:09 AM
Last Updated : 23 Jan 2025 12:09 AM

நெல் ஈரப்பத அளவை நிரந்தமாக 22 சதவீதமாக்க வேண்டும்: மத்தியக் குழுவிடம் டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகளின் ஈரப்பதம் குறித்து நேற்று ஆய்வு செய்த மத்தியக் குழுவினர். உடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர். படம்: ஆர்.வெங்கடேஷ்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நெல்லின் ஈரப்பதம் குறித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை. பனிப்பொழிவால் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மத்திய உணவுத் துறை சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று தஞ்சாவூர் வந்தனர். அவர்களுடன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்ற குழுவினர், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்லைப் பார்வையிட்டு, ஈரப்பதம் குறித்து பரிசோதனை செய்தனர்.

அவர்களிடம் விவசாயிகள் கூறும்போது, "ஒவ்வோர் ஆண்டும் பனி, மழையால் நெல் மகசூல் பாதிக்கப்படுகிறது. நடப்பாண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காரீப் பருவ கொள்முதலில் ஈரப்பதத்தை நிரந்தரமாக 22 சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும்" என்றனர்.

நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை கூறும்போது, "மத்திய அரசின் அறிக்கை, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். மத்தியக் குழுவினர் 80 நெல் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்தில் பரிசோதிக்க உள்ளனர்" என்றார். தொடர்ந்து, ஒரத்தநாடு புதூர், புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு, பாப்பாநாடு ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். நேற்று இரவு தஞ்சாவூரில் தங்கிய குழுவினர் இன்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x